இலங்கையின் முதலாவது செய்மதி (SRI LANKA'S FIRST SATELLITE LAUNCH - SUPREMESAT – I)

இன்று இலங்கையின் மிக முக்கியத்துவமானதும் வரலாற்றில் தடம் பதித்ததுமான முக்கிய நிகழ்வொன்று சீன மண்ணிலிருந்து இடம்பெற்றிருக்கிறது. சுப்ரீம் செட் வன் (Supreme Sat One) என்னும் இலங்கைக்கு சொந்தமான செய்மதி சீனாவிலிருந்து ஏவப்பட்டிருக்கிறது. கடந்த 22 ஆம் திகதி ஏவப் படவிருந்த மேற்படி செய்மதி காலநிலை சீர்கேடு மற்றும் தொழிநுட்பக் கோளாறுகள் காரணமாக இன்றைய தினம் ஏவப் பட்டுள்ளது.
Supreme Sat (pvt) Ltd என்னும் நிறுவனம் இலங்கை முதலீட்டு அபிவிருத்தி சபையுடனான ஒப்பந்தத்தின் பேரில் சீனாவின் China Greatwall Industry Corporation (CGWIC) உடன் இணைந்து சுப்ரீம் செட் வன் (Supreme Sat One) என்னும் செய்மதியை 2012.11.27 அன்று இலங்கை நேரப்படி பிற்பகல் 03.45 மணியளவில் சீனாவின் Xichang Satellite Launch Centre இல் இருந்து Long March 3B/E Launch செய்மதித்தாங்கி மூலம் ஏவப் பட்டுள்ளது. 

இத்திட்டத்தின் அடிப்படை திட்டமிடல் உரிமையை விண்வெளியியல் பொறியியலாளர் ரோஹித ராஜபக்ஷ என்பவர் கொண்டுள்ளார். இலங்கை - சீன நிறுவனங்கள் சேர்ந்து உருவாக்கிய இச் செய்மதி செயற்றிட்டத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி விஜித் பீரிஸ் ஆவார்



உலகில் சொந்த செய்மதியைக் கொண்டுள்ள நாடுகள் பட்டியலில் 45 வது நாடாகவும் தெற்காசியாவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகியவற்றுக்கு அடுத்ததாக 3 வது நாடாகவும் இலங்கை இணைந்துள்ளது. இந்த செயற்றிட்டத்தின் பெறுமதி இலங்கை ரூபாவில் சுமார் 320 மில்லியன்கள் ஆகும். இந்த செய்மதியைக் கட்டுப் படுத்துவதற்கான நிலையம் கண்டி பல்லேகலையில் அமைக்கப் படவுள்ளது. தற்போது தனது ஓடுபாதை இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் செய்மதியைத் தாங்கிய விண்கலம் அதனை அடைந்ததும் தன்னியக்க செயற்பாட்டில் செய்மதி நிலைநிறுத்தப்படும். இதனூடான தொலைத்தொடர்பாடல் சேவைகள் 2013 ஜூலை மாதமளவில் ஆரம்பிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 


15 வருட ஆயுள் கொண்ட இச்செயமதியின் மொத்த எடை 5100 கிலோவாகும். இதன் மூலம் இலங்கையின் தொலைத்தொடர்பாடல் துறை நவீனமயப்படுத்தப்பட்டதும் மேம்பட்டதுமான சேவைகளை இலங்கை மக்களுக்கு வழங்கமுடியும் என எதிர்பார்க்கப் படுகிறது. இலங்கையின் தொலைத்தொடர்பாடல் துறையை இது அடுத்த யுகத்திற்கு இட்டுச் சென்றுள்ளது என்பதில் சந்தேகமில்லை.


Related Posts Plugin for WordPress, Blogger...